×

வியாசர்பாடி சஞ்சய் நகரில் குடிமகன்கள் கூடாரமாக மாறிய பூங்கா: சீரமைக்க கோரிக்கை

 

பெரம்பூர், ஜன.8: வியாசர்பாடி சஞ்சய் நகரில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக, மாநகராட்சி சார்பில் விளையாட்டு பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. மிகப்பெரிய நடைபாதை, அழகு செடிகள், இருக்கைகள் உள்ளிட்ட வசதியுடன் அமைக்கப்பட்ட இந்த பூங்காவை, சஞ்சய் நகர், பி.வி காலனி பகுதி மக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக இந்த பூங்காவை அதிகாரிகள் பராமரிக்காததால், பூங்காவின் சுற்றுச்சுவர் சில இடங்களில் இடிந்து விழும் நிலையில் உள்ளது.

பூங்கா சுற்றுச்சுவரில் இருந்த இரும்பு கம்பிகளை உடைத்து சமூக விரோதிகள் எடைக்கு போட்டு விட்டனர். பூங்காவின் உள்ளே நடைபாதையில் இருந்த கற்கள் மற்றும் பொதுமக்கள் அமரும் நாற்காலிகள் உடைந்து காணப்படுகின்றன. சிலர் இந்த பூங்காவை குப்பை கொட்டும் வளாகமாக பயன்படுத்தி வருவதால் ஆங்காங்கே குப்பை கழிவுகள் குவிந்து கிடக்கிறது. இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் கறுகையில், ‘‘சஞ்சய் நகர் இடநெருக்கடியான பகுதியாகும். சாலையில் வாக்கிங் செல்ல முடியாது.

மேலும் குழந்தைகளும் விளையாட முடியாத ஒரு சூழ்நிலை உள்ளது. இதற்காக பொதுமக்கள் காலை மற்றும் மாலையில் வாக்கிங் செல்லவும், சிறுவர்கள் விளையாடவும் இந்த பூங்கா அமைக்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து பூங்கா பராமரிக்கப்படாததால் இதனை தற்போது சமூக விரோதிகள் மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். சிலர் குப்பை கொட்டுவதால் துர்நாற்றமும் வீசுகிறது. இரவு நேரங்களில் அப்பகுதியை சேர்ந்த சில இளைஞர்கள் மது குடிக்கவும், கஞ்சா புகைக்கவும் இந்த பூங்காவை பயன்படுத்துகின்றனர். இதனால் பொதுமக்கள் மற்றும் பெண்கள் இந்த பூங்காவிற்கு செல்வதை தவிர்த்து விட்டனர்.

மேலும் பூங்காவில் உள்ள பொருட்கள் அனைத்தும் சேதமடைந்து உள்ளது. சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் பூங்காவின் சுற்றுச்சுவரை சரி செய்து மீண்டும் பொதுமக்கள் வந்து செல்வதற்கு எதுவாக நடைபாதை மற்றும் இருக்கைகளை சீரமைக்க வேண்டும். பூங்காவை பராமரிக்க காவலாளி ஒருவரை நியமித்து இரவு 8 மணிக்கு மேல் பூங்காவை பூட்டிவிட்டு யாரும் செல்லாத வகையில் மீண்டும் காலை மற்றும் மாலை மட்டுமே பூங்காவை திறக்கும்படி செய்தால் இப்பகுதி மக்கள் மீண்டும் சஞ்சய் நகர் பூங்காவை பயன்படுத்த ஏதுவாக இருக்கும்,’’ என்றனர்.

The post வியாசர்பாடி சஞ்சய் நகரில் குடிமகன்கள் கூடாரமாக மாறிய பூங்கா: சீரமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Vyasarpadi Sanjay Nagar ,Perambur ,Sanjay Nagar ,PV Colony ,
× RELATED பெரம்பூர் ரமணா நகர் பகுதியில் மெட்ரோ...